தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றது முதல், அரசு நிர்வாகத்தை முடுக்கிவிடும் வகையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பேரிடர் காலங்களில் களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி, தற்போது நகராட்சி நிர்வாகத் துறையின் செயலாளராக அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து இனி செயல்பட உள்ளார்.
1993 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி, தமிழகத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். குறிப்பாக, 2004 சுனாமி பேரழிவு மற்றும் 2015 கடலூர் வெள்ள பாதிப்புகளின் போது, தனது குடும்பத்தைக் கூட பொருட்படுத்தாமல் தீபாவளி பண்டிகையன்று மக்களின் மீட்புப் பணியில் களத்தில் நின்றவர். 2015 வெள்ளத்தின் போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்துக்கொண்டு வயலில் இறங்கியபோது, தானும் பேன்ட்டை முட்டி வரை மடித்துக்கொண்டு அவருக்குப் பாதிப்புகளை விளக்கிய இவரது அர்ப்பணிப்பு படம் இன்றும் மக்கள் மனதில் நீங்காத ஒன்று.
மேலும், பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த 110 கோடி ரூபாய் முறைகேட்டை வெளிப்படையாக உடைத்து விசாரணை நடத்திய துணிச்சலான அதிகாரி. சென்னை மாநகராட்சி ஆணையர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எனப் பல துறைகளில் முத்திரை பதித்த ககன்தீப் சிங் பேடி, தற்போது நகராட்சி நிர்வாகத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பது விஜய் அரசின் நிர்வாக வேகத்தை மேலும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
