தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற, துணிச்சலான மற்றும் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பெ. அமுதா, தற்போது விஜய் தலைமையிலான ஆட்சியில் உணவுத் துறை செயலாளராக அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1994 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 30 ஆண்டுகாலப் பணியில் மத்திய, மாநில அரசுகளின் 15-க்கும் மேற்பட்ட முக்கியத் துறைகளில் முத்திரை பதித்தவர்.

​தர்மபுரியில் பெண் சிசுக்கொலைக்கு எதிராக சாட்டை சுழற்றியது, டெல்லி பிரதமரின் அலுவலகத்தில் (PMO) பணியாற்றியது, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கே பாடம் எடுத்த பேராசிரியராக இருந்தது என இவருக்குப் பெருமைகள் பல உண்டு. குறிப்பாக, 2015 சென்னை வெள்ளத்தின் போது நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி மாஸ் காட்டினார்.

​அதைவிட முக்கியமாக, 2018-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதிச்சடங்குப் பணிகளை, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த வெறும் 5 மணி நேரத்தில் எவ்வித சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையும் இன்றி மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்தார். வெள்ளை உடை அணிந்து ஓடோடிப் பணியாற்றி, கலைஞர் மீது மகள் போன்ற அன்போடு கடைசி பிடி மண்ணைப் போட்ட அமுதா ஐஏஎஸ்-ன் நிர்வாகத் திறமை தமிழக வரலாற்றில் பதிவான ஒன்று.

இதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்துல் கலாம் ஆகியோரின் இறுதிச் சடங்குகளையும் இவரே திறம்பட முன்னின்று நடத்தினார். ​தற்போது அம்மா உணவகங்களைச் சீரமைத்து, தரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், அமுதா ஐஏஎஸ் உணவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!