2026 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 1,057 பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தத் துறைப் பணியாளர்களுக்கு வீரதீரச் செயல் மற்றும் சேவைக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதில் 301 வீரதீரச் செயல் பதக்கங்களும், 92 குடியரசுத் தலைவர் பதக்கங்களும், மற்றும் 664 தகுதியுடைமைச் சேவைப் பதக்கங்களும்  அடங்கும்.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட 301 வீரதீரச் செயல் பதக்கங்களில் அதிகபட்சமாக 197 பதக்கங்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் (நக்சலைட்) பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீரத்தைக் காட்டியதற்காக வழங்கப்பட்டுள்ளன. இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 51 வீரர்களும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 12 வீரர்களும் விருது பெற்றுள்ளனர். சத்தீஸ்கர் காவல்துறைப் பணியாளர்கள் 141 வீரதீரச் செயல் பதக்கங்கள் உட்பட மொத்தம் 152 பதக்கங்களைப் பெற்றுப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்.

சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் மொத்தம் 92 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறையைச் சேர்ந்த 83 பேர், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 4 பேர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் சிறைத் துறையைச் சேர்ந்த 2 பேர் அடங்குவர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 உயர் அதிகாரிகள், பிஎஸ்எஃப் அமைப்பைச் சேர்ந்த 5 அதிகாரிகள் மற்றும் சிபிஐ, என்ஐஏ, என்டிஆர்எஃப் உள்ளிட்ட மத்திய புலனாய்வு மற்றும் மீட்பு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த உயரிய கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் 664 தகுதியுடைமைச் சேவைப் பதக்கங்கள், பல்வேறு மாநிலக் காவல் துறைகள் மற்றும் மத்திய ஆயுதப் படைகளுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன. மாநில அளவில் உத்தரப் பிரதேசம் 75 பதக்கங்களுடன் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 37 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 17 காவல் அதிகாரிகளும் இந்தச் சிறப்புப் பதக்கத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாகச் சேவைகளின் அடிப்படையில் பார்க்கும்போது காவல்துறைக்கு 961 பதக்கங்களும், தீயணைப்புத் துறைக்கு 61 பதக்கங்களும், ஊர்க்காவல் மற்றும் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு 21 பதக்கங்களும், சிறைத் துறைக்கு 14 பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைப் பாதுகாப்பு முதல் நகரத்தின் சட்டம் ஒழுங்கு வரை தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சேவை செய்யும் பணியாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.