மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனித நேயமற்ற முறையில் அரங்கேறி வந்த ஒரு கும்பலின் செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுடுகாட்டிற்கு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு வரப்படும் உடல்களில் போர்த்தப்படும் புத்தாடைகளைத் திருடி, அவற்றைச் சுத்தம் செய்து புதிய உடைகள் போல சந்தையில் விற்கும் கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது.

இந்தூர் முதல் அகமதாபாத் வரை பரவியுள்ள இந்த நெட்வொர்க், பிணங்களில் இருந்து எடுக்கப்படும் சால்வைகள், சட்டைகள் மற்றும் புடவைகளை மிகக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து, பின் அதனை இஸ்திரி செய்து அதிக விலைக்கு விற்று சட்டவிரோத லாபம் ஈட்டி வந்துள்ளது.

சுடுகாட்டில் உள்ள ஊழியர்களே இந்த ஆடைகளைத் திருடி ஏஜென்ட்களிடம் விற்பனை செய்த அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது. ஒரு சால்வை 20 ரூபாய்க்கும், சட்டை மற்றும் பேண்ட்கள் 50 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டு, பின் நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

சுடுகாட்டில் இலாபத்திற்காக இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது மக்களின் மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குவதுடன், அதிகாரிகளின் கண்காணிப்பு இன்றி இவ்வளவு பெரிய கும்பல் எப்படிச் செயல்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.