பெண்களின் அழகை மெருகூட்டுவதில் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கிற்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆனால், வடகொரியாவில் பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெண்கள் தங்கள் விருப்பப்படி மேக்கப் செய்துகொள்ளும் சுதந்திரம் அங்கு மறுக்கப்படுவதோடு, ஒரு பெண் சிவப்பு லிப்ஸ்டிக் அணிந்திருப்பது கண்டறியப்பட்டால் அவர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் அங்குள்ள பெண்கள் அடர் சிவப்பு நிறத்தைத் தவிர்த்து, மிகவும் மென்மையான நிறங்களையே பயன்படுத்துகின்றனர்.
இந்த விசித்திரமான தடைக்கு பின்னால் ஒரு அரசியல் காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடகொரிய அரசாங்கம் சிவப்பு நிறத்தை முதலாளித்துவத்தின் அடையாளமாகவும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும் கருதுகிறது. தங்கள் நாட்டின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தடையை அவர்கள் அமல்படுத்தியுள்ளனர்.
இதைக் கண்காணிப்பதற்காகவே அங்கு தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதால், அந்த நாட்டுப் பெண்கள் சிவப்பு லிப்ஸ்டிக் பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
