அமெரிக்காவின் நியூயார்க் நகர சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில், உயிருள்ள கரப்பான் பூச்சிகள் நிரப்பப்பட்ட வெளிப்படையான மேல்சட்டை அணிந்த நபர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது வெறும் வினோதச் செயல் மட்டுமல்ல, ஒரு திட்டமிடப்பட்ட விளம்பர உத்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது ஊதப்பட்ட ‘பஃபர்’ (Puffer) ஜாக்கெட் முழுவதும் உயிருள்ள கரப்பான் பூச்சிகளை நிரப்பிக் கொண்டு மிகவும் சாதாரணமாக ரயில் நிலையத்தில் நிற்கிறார். அந்த சட்டையின் ஒவ்வொரு பகுதியிலும் பூச்சிகள் நெளிவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதனைப் பார்த்த சக பயணிகள் முகச்சுளிப்புடனும், ஒருவித அச்சத்தோடும் அவரை கடந்து செல்கின்றனர்.
ஆரம்பத்தில் இது ஏதோ ஒரு வினோத மனிதரின் செயல் என்று கருதப்பட்ட நிலையில், ‘அன்காமன் என்.ஒய்’ (Uncommon NY) என்ற நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனம், இது தங்களின் புதிய தயாரிப்பான ‘ரோக்கோட்’ (Roachcoat) என்பதற்கான விளம்பர முயற்சி என்று அறிவித்துள்ளது.
இந்தச் சட்டையில் பயன்படுத்தப்பட்டிருப்பது ‘மடகாஸ்கர் ஹிஸ்ஸிங்’ (Madagascar hissing cockroaches) வகை கரப்பான் பூச்சிகள் ஆகும். இவை பொதுவாகத் திரைப்படங்கள் மற்றும் கல்வி சார்ந்த சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படுபவை.
இந்த வினோத முயற்சிக்கு ஒரு சுவாரசியமான பின்னணி உள்ளது. அண்மையில் நடைபெற்ற NBA கூடைப்பந்து தொடரின் போது, ‘நியூயார்க் நிக்ஸ்’ அணியினரை அவர்களது விடாமுயற்சியைக் குறிக்கும் வகையில் எதிரணியினர் ‘கரப்பான் பூச்சிகள்’ என்று கேலி செய்தனர். “கரப்பான் பூச்சிகளைப் போல இவர்களை அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியாது” என்ற அந்த கிண்டலை, நேர்மறையான ஒரு குறியீடாக மாற்ற விரும்பிய ஆடை நிறுவனம், இந்த ‘ரோக்கோட்’ உடையை வடிவமைத்துள்ளது.
🚨JUST IN: On the latest episode of WTF NEW YORK, a man was spotted at a subway station wearing a jacket that has multiple pockets with LIVE COCKROACHES INSIDE!
You couldn't pay me to go to NYC. pic.twitter.com/shGUJvxl5t
— AmericanPapaBear™ (@AmericaPapaBear) April 10, 2026
சுற்றுச்சூழல் மற்றும் நாகரிகம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தாலும், ‘விடாமுயற்சி மற்றும் உயிர் பிழைத்தல்’ என்பதன் அடையாளமாக இந்த ஆடையை அந்நிறுவனம் முன்வைத்துள்ளது. இருப்பினும், “இது பார்ப்பதற்கே அருவருப்பாகவும், ஒருவித பயத்தையும் ஏற்படுத்துகிறது” எனப் பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
