அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெற்ற உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதால், அமெரிக்க குழுவினர் வாஷிங்டன் திரும்பினர்.
ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. சுமார் 6 வாரங்களாக நீடித்த இந்தப் போரில், கடந்த 7-ஆம் தேதி முதல் இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.
இந்த முக்கிய பேச்சுவார்த்தைக்காக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தான் வந்தடைந்தனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, நகரம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. நேற்று மதியம் 1 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை, நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது. சுமார் 15 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில், இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டனர். சுமார் 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பல்வேறு கட்ட விவாதங்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை 3.40 மணியளவில் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியதாவது, பாகிஸ்தான் மிகச்சிறந்த முறையில் மத்தியஸ்தம் செய்தது. ஈரானியர்களுடன் நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. இது அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். எங்களது நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது.
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடாது என்பதில் அமெரிக்க அதிபர் உறுதியாக உள்ளார். ஈரானின் அணுச் செறிவூட்டல் மையங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டாலும், எதிர்காலத்தில் அவர்கள் மீண்டும் அணு ஆயுத முயற்சியில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால், இதில் இணக்கம் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்றார். மேலும் இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
