மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பவுட் கிராமத்தில் உள்ள நாகேஷ்வர் கோவிலில், அன்னபூரணி தேவியின் சிலை மீது அவமதிக்கும் வகையில் நடந்த செயல் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் 19 வயதான சந்த் நௌஷாத் ஷேக் என்பவர் சிவன் கோவிலுக்குள் நுழைந்து, அன்னபூரணி சிலையை கீழே வீசி சேதப்படுத்தியதோடு , அதன்மீது சிறுநீர் கழித்தும், அசிங்க செயல்களில் ஈடுபட்டதும் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விரைவாக பரவி, பலரிடமும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மதநம்பிக்கையை குலைக்கும் இந்த செயல் குறித்து பலரும்  கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, சந்த் ஷேக் மற்றும் அவரது தந்தை நௌஷாத் ஷேக் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

 

ஹவேலி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் புஜாரி கூறியதாவது, சந்த் ஷேக் மீது பவுட் காவல் நிலையத்தில் BNS பிரிவுகள் 196, 298, 299, 302, 351(2) மற்றும் 3(5) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.