பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதரின் வீட்டில் குஜராத்தைச் சேர்ந்த தேஜாஸ் ஜானி என்ற இளைஞர் சனிக்கிழமை மாலை ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரபுபுரா பகுதியில் உள்ள ஹைதரின் வீட்டு கதவை பலமுறை உதைத்துக் கத்திய ஜானி, கதவைத் திறந்தவுடன் சீமாவின்  கழுத்தை நெரித்து, முகத்தில் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் விரைந்து வந்து  ஜானியை பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானி, டெல்லி வரை ரயிலில் வந்த நிலையில் அதன் பின்னர் பஸ், ஆட்டோ ஆகியவற்றைப் பயன்படுத்தி ரபுபுரா வந்ததாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் போது, சீமா ஹைதரும் அவரது இந்திய கணவர் சச்சினும் தமக்கு “சூனியம்” செய்ததாகவும், அதனால் தான் தாக்குதலை மேற்கொண்டதாகவும் ஜானி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவரது மனநிலை சரியில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்த சீமா ஹைதர் பஹல்காம் தாக்தலுக்கு பிறகு நாடு கடத்தப்படுவாரா இல்லையெனில் தொடர்ந்து இந்தியாவில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவர் தன்னை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசிடமும் உத்திரபிரதேச அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த நிலையில் வாலிபர் ஒருவர் அவர் மீது தாக்குதல் நடத்தியதால் இது திட்டமிட்டதா அல்லது தற்செயலாக நடந்ததா என்பதை ஆய்வு செய்ய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.