உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் தர  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சி மற்றும் அந்த கட்சியினுடைய வில் அம்பு ஆகியவற்றை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய  விவகாரத்தில் தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து, அதனை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் தலைமையிலான அமர்வு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 வார காலத்திற்குள் இந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

இந்த வழக்கை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார். சிவசேனா கட்சியை சேர்ந்த  ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார்கள். இதன் காரணமாகவே உத்தவ் தாக்கரேவின் அரசு கவிழ்ந்தது. தனி அணியாக செயல்பட்ட ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார்கள். இதில் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவினுடைய தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சர் ஆகவும் பதவியேற்றனர்..

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் இருந்து கொண்டிருந்த நிலையில், கட்சியினுடைய பெயர், வில் – அம்பு சின்னத்திற்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகியது. அதை விசாரித்த தேர்தல் ஆணையம் என்பது கட்சியினுடைய பெயரும், வில் – அம்பு சின்னமும்  ஷிண்டே தலைமையிலான அணிக்கு சொந்தம் என சில நாட்களுக்கு முன் ஒதுக்கி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு என்பது இன்றைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கபில் சிபல் மற்றும் மூத்த வழக்கறிஞர் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் உத்தவ் தாக்கரே சார்பில் வாதங்களை முன்வைத்தனர். அதன்படி இந்த வழக்கை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சிவசேனா தரப்பு எம்எல்ஏக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாக இருக்கிறது. இரண்டு வார காலத்திற்குள் இந்த பதில் மனு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. அதன் பிறகு இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட உத்தரவுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பிப்பார்கள்.