தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மிகக் கடுமையாக அமலில் உள்ளன. இந்தச் சூழலில், மறைந்த முக்கிய தலைவர்களின் சிலைகளைத் துணிகளால் மூடி மறைக்கத் தேவையில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECi) தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.

​இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் முறைப்படி அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் காலத்தில் தலைவர்களின் சிலைகள் மூடப்படுவது குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கு இந்த உத்தரவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்தச் சாதகமான முடிவானது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.