நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும் விவசாயிகளும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் 50 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். அந்த வகையில் நாமக்கல் பூங்கா சாலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோமதேக மாவட்ட விவசாய அணி செயலாளர் கே.ரவிச்சந்திரன், பாமக மாநில நிர்வாகி பொன் ரமேஷ், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.