கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த விசாரணையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் பிரசாரத்தைத் தொடர்ந்தது ஏன், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான கூட்டம் கூடியதை ஏன் கவனிக்கவில்லை, மற்றும் நெரிசலின் போதும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர்.
மேலும் இதற்குப் பதிலளித்த விஜய், தான் தமிழக காவல்துறையினரை முழுமையாக நம்பியதாகவும், அவர்களின் வழிகாட்டுதலின் படியே செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய் ஓரிரு வரிகளில் பதிலளித்த நிலையில், சில குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் இந்த விசாரணை மேலும் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த மாதம் சிபிஐ தாக்கல் செய்யவுள்ள குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த விசாரணை, தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
