கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு விநோதமான சம்பவம், சிறிய திருட்டுகளைச் சாதாரணமாகக் கருதுபவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது. பணமோ, நகையோ திருடினால் கூட எளிதில் தப்பிக்கும் திருடர்கள் மத்தியில், ஒரு வெங்காய மூட்டையைத் திருடியவர் இன்று கம்பி எண்ணும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்டன்விளையில் மளிகைக்கடை நடத்தி வருபவர் பாஸ்கர் (49). கடந்த சில நாட்களுக்கு முன், மதிய உணவுக்காகக் கடையை மூடிவிட்டுச் சென்ற அவர் திரும்பி வந்தபோது, கடையின் வெளியே இருந்த ஒரு மூட்டை சின்ன வெங்காயம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் நைசாக வெங்காய மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஸ்கூட்டரில் வைத்துத் தப்பிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, கடையின் உரிமையாளர் பாஸ்கர், இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் வழக்குப்பதிவு செய்து கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினார். சிசிடிவி பதிவில் பதிவான ஸ்கூட்டரின் எண்ணையும், நபரின் உருவத்தையும் வைத்து விசாரித்ததில், வடக்கு நுள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த தனபால் (52) என்பவர் தான் வெங்காயமூட்டையைத் திருடியது தெரியவந்தது.

சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 என விற்கப்படும் நிலையில், 25 கிலோ கொண்ட இந்த மூட்டையின் மதிப்பு சுமார் ரூ.2,000 ஆகும். விலை அதிகமாக உள்ளதால், அதைத் திருடி லாபம் சம்பாதிக்க நினைத்த தனபாலை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரைச் சிறையில் அடைத்தனர்.

பணம், நகை திருடியவர்கள் கூட ஜாலியாக இருக்கும் நிலையில், ஒரு வெங்காய மூட்டையைத் திருடிய தனபால் இன்று கண்ணீரில் மிதப்பது, சிறிய திருட்டுகளும் சட்டப்படி குற்றம் என்பதை உணர்த்துகிறது.