தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சுற்றியுள்ள நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்க மறுத்ததன் பின்னணியில், வலுக்கட்டாய கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

அதாவது நர்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ஸ்வேதா ஆகிய இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், ஸ்வேதாவின் பெற்றோர் பால் நரசிம்ம மற்றும் மகேஸ்வரி ஆகியோர் இந்த உறவிற்கு எதிராக இருந்தனர். இதையடுத்து, ஜூலை 11ஆம் தேதி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, செக்கிந்திராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்து, பின்னர் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தனர்.

இதற்கிடையில், பிரவீனின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தன்னை பராமரிக்க மனைவியுடன் சொந்த ஊரான நர்சம்பள்ளிக்கு திரும்பினார். இந்த தகவல் ஸ்வேதாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும், அதிரடியாக ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஸ்வேதாவின் பெற்றோர்களான பால் நரசிம்ம, மகேஸ்வரி மற்றும் சில உறவினர்கள் காரில் வந்து, முதலில் பிரவீனின் வீட்டை முற்றுகையிட்டனர். பிரவீன் மற்றும் அவரது பெற்றோர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அவர்களது கண்களில் மிளகாய்ப் பொடியும் வீசினர் என கூறப்படுகிறது. இதற்கிடையே, வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், ஸ்வேதாவை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, கைகளும் கால்களும் கட்டி, காரில் ஏற்றி கொண்டு சென்றனர். இந்த கடத்தல் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பிரவீன், கீசரா காவல் நிலையத்தில், தனது மாமியார் மற்றும் மற்ற உறவினர்கள் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளார். “ஐயா, அவர்கள் என் மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தயவுசெய்து எனக்கு உதவுங்கள். என் மனைவியை மீட்டுத் தர வேண்டும்” என்று பிரவீன் போலீசாரிடம் கண்ணீர் விட்டுக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் போலீசார் தற்போது இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்வையாளர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.