2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபாரமாகச் செயல்பட்டு, தொடர் நாயகன் விருது வென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், தனது சொந்த மாநிலமான கேரளா திரும்பியபோது அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதாவது போட்டிக்கு பிறகு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் அவரது மனைவி சாருலதா வந்தடைந்தனர்.

உலகக் கோப்பையை வென்று திரும்பிய தங்களின் ‘ஹீரோ’-வை வரவேற்க விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். சஞ்சுவின் வருகையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது. ரசிகர்கள் முழக்கமிட்டும், பூக்கள் தூவியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விமான நிலையத்திற்கு வெளியே ரசிகர்களின் கூட்டத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த சஞ்சுவின் மனைவி சாருலதா, சஞ்சு சாம்சன் விரைவில் வெளியே வருவார் என்று ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துச் சைகை காட்டினார். அவரது இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சஞ்சு சாம்சன் வெளியே வந்ததும், ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

சஞ்சு சாம்சனின் இந்த உலகக் கோப்பை பயணம் எந்தவொரு சினிமா கதையையும் விட விறுவிறுப்பானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சரிவைச் சந்தித்த அவர், அணியிலிருந்து நீக்கப்பட்டார். உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


இருப்பினும், ‘சூப்பர்-8’ சுற்றில் கிடைத்த வாய்ப்பைத் திறம்படப் பயன்படுத்திக் கொண்ட சாம்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டி அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார். இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் குவித்து, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் என்ற சாதனையைப் படைத்தார். தொடர் முழுவதும் அவரது சீரான ஆட்டம், அவரை ‘தொடர் நாயகன்’ விருதிற்கு இட்டுச் சென்றது.

மேலும் கடுமையான விமர்சனங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களைக் கடந்து, இன்று தேசத்தின் நாயகனாகத் தனது சொந்த மண்ணிற்குத் திரும்பியுள்ள சஞ்சு சாம்சனின் வளர்ச்சி, இளம் கிரிக்கெட் வீரர்களுக்குப் பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.