மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான நிலையை எட்டியுள்ளது. ஏவுகணை வீச்சுகள், வான்வழித் தாக்குதல்கள் எனப் போர் விரிவடைந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான், “ஆபரேஷன் ஹானஸ்ட் பிராமிஸ் 4” என்ற பெயரில் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகளை நோக்கி ஏவியுள்ளது.
OMG CNN accidentaly confessed live on TV the massive censorship Israel doing for damage and optics control :
“We’re not showing you that, because the Israeli government doesn’t allow us or want us to show where that may have come from.” pic.twitter.com/IZKOQNfQsJ
— Furkan Gözükara (@FurkanGozukara) March 4, 2026
போர் தற்போது ஈரான் – இஸ்ரேல் எல்லையைத் தாண்டி வளைகுடா நாடுகள் வரை பரவியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. இது போரின் போக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
துருக்கிய வான் எல்லைக்குள் நுழைய முயன்ற ஈரானின் ஏவுகணையை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தின. இந்த மோதலில் நேட்டோ கூட்டணி நேரடியாகத் தலையிடுவது இதுவே முதல் முறையாகும். அச்சுறுத்தல் அதிகரித்தால் ‘உறுப்பு நாடுகள் மீதான கூட்டுத் தாக்குதல்’ விதியை அமல்படுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஈராக்கில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டுத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா பகுதிகளில் ஈரான் ஏவுகணைகளை ஏவியதால் அபாயச் சங்குகள் முழங்கின. பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல். இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு தளங்களை நேரலையில் காட்ட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சிஎன்என் (CNN) செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் போர் தொடர்பாக தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால், வரும் நாட்கள் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.
