கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்செயலுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதனிடையில் சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவை முன்னிட்டு கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

இதையடுத்து கடலூர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் காவல்துறையினர் உதவியுடன் கனக சபை மீது வைக்கப்பட்ட பதாகையை அகற்றினர். இதன் காரணமாக பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்றனர். இதை தடுத்த தீட்சிதர்கள் கனகசபை கதவை உட்பக்கமாக பூட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து தீட்சிதர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.