தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பேருந்து கிளம்பியது. இந்த பேருந்தை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சிலர் சாலையில் நின்று தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்‌. இதனால் தகராறில் ஈடுபட்ட 8 பேர் பேருந்தை ஏன் நிறுத்தினாய் என்று ஓட்டுநரிடம் கேட்டு அவரை தாக்கினர்.

அதோடு பயணிகள் 2 பேரையும் அவர்கள் தாக்கினர். இதில் ஓட்டுநர் வலி தாங்க முடியாமல் அலறிய நிலையில் பொதுமக்களிடம் இரண்டு பேர் சிக்கிக்கொண்டனர். இது குறித்த தகவலின் பேரில் கும்பகோணம் நகர கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் பிடிபட்ட 2 பேரை பொதுமக்கள் ஒப்படைத்த நிலையில் அவர்கள் சுதர்சன் மற்றும் ஜனார்த்தனன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு தலைமறைவாக உள்ள மற்ற 6 பேரை தேடி வருகிறார்கள். மேலும் காயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.