திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழவேற்காடு ஏரி உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 2-வது ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுழற்சி முறையில் ஏரி மற்றும் கடலில் மீன் பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் கோட்டைகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி உபகரணங்களை கன்னியம்மன் திட்டில் வைத்துவிட்டு வீட்டிற்கு செல்வார்கள்.

இங்குள்ள மீன்பிடி உபகரணங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் 15 லட்சம் மதிப்பிலான வலைகள் எரிந்து நாசமானது. இது தொடர்பாக திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.