இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அதேசமயம் மொபைல் போன்கள் நீண்ட நேரம் சார்ஜ் செய்த பிறகு வெடிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சிலர் ஒரே இரவில் ஃபோனை சார்ஜ் செய்து கொண்டு தூங்கும் பழக்கம் கொண்டவர்கள். அதிலும் சிலர் மணி கணக்கில் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து விட்டு அதன் பிறகு அப்படியே மறந்து விடுவார்கள். நீண்ட நேரம் உங்களின் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்வதால் பேட்டரி சேதம் அடைவது மட்டுமல்லாமல் வெடிக்கும் ஆபத்துகளும் நிகழும்.

தற்போதைய அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் தானியங்கி சார்ஜிங் ஸ்டாப் வசதி உள்ளது. உங்களின் போன் 100 சதவீதம் சார்ஜ் செய்யப்பட்டவுடன் அதுவே தானாக சார்ஜிங் துண்டித்து விடும் அம்சம் உள்ளது. ஆனால் ஒரு சில நேரங்களில் தானியங்கி அமைப்பை செயலிழக்கும் போது பிரச்சனை ஏற்படும். அதனால் பேட்டரி வீங்கி ஃபோன் வெடிக்கும் அபாயம் நிகழக்கூடும். தானியங்கி சார்ஜிங் கட் சிஸ்டம் செயலிழந்து பேட்டரி அதன் திறனை தாண்டி சார்ஜ் செய்வதன் மூலமாக வீக்கம் அடையும்போது செல்போன் வெடிப்பு ஏற்படுகிறது. இப்படியான நிலையில் போனை சார்ஜ் செய்துவிட்டு அதன் பிறகு மறந்து விடாதீர்கள் என்பதுதான் டெக்னீசியன்கள் தரும் ஒரே அறிவுரையாகும்.