இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது..

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1:0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேயில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே இடது முழங்கால் காயம் காரணமாக சாம்சன் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியின் போது பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்யும் போது சஞ்சு சம்சனின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழுவால் நேற்று பிற்பகல் மும்பையில் ஸ்கேன் மற்றும் நிபுணர்களின் கருத்துக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் அவருக்கு ஓய்வு மற்றும் மறுவாழ்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மாவை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது.சஞ்சு சாம்சன் ஆடாததால் ராகுல் திரிபாதி இன்றைய ஆடும் லெவனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

முதல் டி20 போட்டியில் நூலிழையில் தோல்வியடைந்த இலங்கை அணி 2ஆவது டி20 போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி 2ஆவது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும். இரு அணிகளும் வெற்றிக்கு போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்..

இலங்கை டி20 போட்டிகளுக்கான இந்திய அணி : 

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (WK), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (து.கே), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

இந்திய டி20 போட்டிகளுக்கான இலங்கை அணி :

தசுன் ஷானகா (கேப்டன்), பதும் நிஷாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னே, சதீர சமரவிக்ரம், குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, அஷேன் பண்டாரா, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்கா, கசுன் ராஜிதா, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷான், லஹிரு குமாரா, நுவான் துஷாரா.