முழங்கால் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சாம்சன் விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்யும் போது சஞ்சு சம்சனின் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சூழலில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேயில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முழங்கால் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே  இவர் ஆடாததால் ராகுல் திரிபாதி இன்றைய ஆடும் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 1வது டி20 போட்டியின் போது பவுண்டரி கயிறுகளுக்கு அருகில் பந்தை பீல்டிங் செய்ய முயன்ற போது சாம்சனின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

பிசிசிஐ மருத்துவக் குழுவால் இன்று (நேற்று) பிற்பகல் மும்பையில் ஸ்கேன் மற்றும் நிபுணர்களின் கருத்துக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார், மேலும் அவருக்கு ஓய்வு மற்றும் மறுவாழ்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மாவை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. இந்திய அணி இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை புனேவில் ஜனவரி 5, 2023 அன்று விளையாடுகிறது.

இலங்கை டி20 போட்டிகளுக்கான மேம்படுத்தப்பட்ட இந்திய அணி :

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (WK), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (து.கே), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.