2023 ஆசியக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன..

2022 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. 20 ஓவர் கொண்ட போட்டிகளாக நடத்தப்பட்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையையும் இந்திய அணி வெல்ல முடியவில்லை. இந்நிலையில் 2023 செப்டம்பர் மாதத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) 2023-24ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் காலெண்டரை வியாழக்கிழமை வெளியிட்டது. ஏசிசி தலைவர் ஜெய் ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “பாதை அமைப்பு மற்றும் கிரிக்கெட் காலண்டர்களை” வெளியிட்டார்.ஆசிய கோப்பை 2023 செப்டம்பரில் நடைபெறும் என்றும், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெறும் என்றும் பிசிசிஐ செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் உள்ளன.
அதேபோல இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணி மற்றொரு பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இந்த முறை ஒரு நாள் கிரிக்கெட் தொடராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மென் இன் ப்ளூ (இந்தியா) அணியினர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா 2023 50 ஓவர் ஆசியக்கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டியை வேறு ஒரு நடுநிலையான இடத்திற்கு நடத்த வேண்டும் என்றும், அப்படி நடத்தினால் இந்தியா பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

இதற்கு அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ரமீஷ் ராஜா ஆசிய கோப்பையை எங்களிடமிருந்து பறித்து வேறொரு இடத்தில் நடத்தினால் நாங்கள் இந்தியாவில் நடத்தப்படும் 50 ஓவர் உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில்,  பிசிபியின் புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.