சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரக்கூடிய தனது தாயை பார்க்க தன்னை இலங்கைக்கு அனுப்பக்கோரி சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் தான் அவரை இலங்கைக்கு அனுப்ப அனைத்து பணிகளும் தயாராக இருப்பதாகவும், இதற்கு இலங்கை அரசும் சம்மதம் தெரிவித்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சாந்தன் நேற்று உயிரிழந்த நிலையில், அவர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் கே. குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலையில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில், நேற்று அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு மத்திய அரசிடமிருந்து எப்போது வந்தது என கேட்டார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், கடந்த 22ஆம் தேதி தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், மேலும் சாந்தனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்ககோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிறகு ஏன் சாந்தனை அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், சாந்தன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான், அதற்காகத்தான்  அவரை அனுப்ப முடியவில்லை எனவும், அவரால் நகர முடியாத சூழல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சாந்தன் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சாந்தனின் உடல்நிலை தொடர்பான அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அவரது உடலை  இலங்கைக்கு அனுப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தன் உடலை  விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சாந்தன் உடலை கொண்டு செல்வதற்கான இலங்கை தூதரக அனுமதி, இறப்பு சான்றிதழ், பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அவற்றை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என்றும், மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி முகாமிலிருந்து அங்கே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தது வரை உள்ள  தகவல்களை வழக்கு விசாரணை பொது அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் பிப்ரவரி 27ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் அவரது உடல் மோசமாகி பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.