மரணத்திற்கு மிக அருகில் இருக்கும் மனிதர்களின் மனதில் என்ன ஓடும்? அவர்கள் என்ன மாதிரியான கனவுகளைக் காண்பார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் வகையில் ‘டெத் ஸ்டடீஸ்’ (Death Studies) என்ற இதழில் ஒரு வியப்பூட்டும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
சுமார் 239 மருத்துவ நிபுணர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மரணத்தை நெருங்குபவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கனவுகளைக் காண்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏற்கனவே இறந்துபோன தங்களுக்குப் பிடித்தமான உறவினர்கள் நேரில் வந்து வரவேற்பது போலவும், பிரகாசமான ஒளி வெள்ளம், திறந்திருக்கும் கதவுகள் அல்லது படிக்கட்டுகளில் ஏறிச் செல்வது போன்ற கனவுகள் அவர்களுக்கு அதிகளவில் வருகின்றனவாம்.
இது அவர்களுக்கு ஒருவித நிம்மதியையும், பயமில்லாத மரணத்தையும் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதே சமயம், மனதில் தீராத கவலை அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தைப் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, கொடூரமான உருவங்கள் தங்களை இழுப்பது போன்ற பயமுறுத்தும் கனவுகளும் வருவதுண்டு.
“மரணத்தின் போது வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை இத்தகைய கனவுகள் மூலமாகவே மனித மனம் கடக்க முயற்சி செய்கிறது” என இந்த ஆய்வை நடத்திய எலிசா ராபிட்டி தெரிவித்துள்ளார்.
