இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ரகசியத் தகவல்களை கசியவிட்ட குற்றத்திற்காக அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமித்குமார் என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அசாம் மாநிலம் திப்ருகாரில் உள்ள விமானப்படைத் தளத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்தப் பணிக்காலத்தில், இந்திய விமானப் படையின் முக்கியத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் ராணுவத்திடம் பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தேசவிரோதச் செயலைத் துல்லியமாகக் கண்காணித்து வந்த ராஜஸ்தான் மாநிலப் புலனாய்வுப் பிரிவு போலீசார், திப்ருகாரில் வைத்து அவரைச் சமீபத்தில் கைது செய்தனர்.

இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் உளவாளிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.