பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது சம்பளக் கணக்கு (Salary Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் மற்றும் பரிவர்த்தனை செய்யும் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறையின்படி, இதுவரை சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 10-ல் இருந்து 5 ஆகக் குறைக்கப்படுகிறது.

​இந்த நிர்ணயிக்கப்பட்ட 5 இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் (Cash Withdrawal) தலா ₹23 உடன் ஜிஎஸ்டி (GST) கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல, பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணம் அல்லாத இதர பரிவர்த்தனைகளுக்கு (Non-financial transactions) தலா ₹11 உடன் ஜிஎஸ்டி கட்டணமாக விதிக்கப்படும் என எஸ்பிஐ நிர்வாகம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

​எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய ஏடிஎம் சேவை விதிகள் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன. ஏற்கனவே கனரா வங்கியும் இதேபோன்று ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனை விதிகளில் மாற்றங்களை அறிவித்திருந்த நிலையில், தற்போது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயும் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பது சம்பளக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.