சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, விமானப் பயணத்தின் போது பக்தர்கள் இருமுடியை பைகளில் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. மாலை அணிந்து, விரதத்தில் இருந்து, இருமுடி கட்டிக்கொண்டு தரிசனத்திற்கு செல்லும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
இந்தச் சூழ்நிலையில், பக்தர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, இருமுடி பைகளை விமானங்களில் எடுத்துச் செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு இதுகுறித்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளார்: “சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் விமானப் பயணத்தின் போது இருமுடியை எடுத்துச் செல்லலாம். இந்த சலுகை நவம்பர் 28 முதல் அமலில் வந்துள்ளது. ஜனவரி 20 வரை இது தொடரும். பக்தர்களின் ஆழமான உணர்வுகளை மதித்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகள் பூரணமாக பின்பற்றப்படும். ஒவ்வொரு சமூகத்தின் நம்பிக்கை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் சபரிமலை மண்டல காலத்தை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி, ஐயப்ப பக்தர்களால் வரவேற்கப்படும் வாய்ப்புள்ளது.
