உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூர் மாவட்டத்திலுள்ள ஹஸ்வா பகுதியில் கள்ளக்காதல் சந்தேகத்தால் அரங்கேறிய இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த தில்தார் என்ற இளைஞன், தனது நண்பன் பைசான் என்பவருக்கும் தனது அண்ணி ஜிக்ரா பிரவீனுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்துள்ளார்.
இதன் காரணமாகத் திட்டமிட்டு தனது நண்பனை கிரிக்கெட் விளையாட வருமாறு மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்ற தில்தார், அங்கு வைத்து அவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். நண்பனைத் தீர்த்துக்கட்டிய கையோடு தில்தார் நேராகத் தனது வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த தனது அண்ணி ஜிக்ரா மற்றும் தனது சகோதரியை ஓங்கி கத்தியால் குத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சகோதரி கான்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த பயங்கரச் சம்பவத்திற்குப் பிறகு, தில்தார் தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். தற்போது போலீசார் தில்தாரைக் கைது செய்து, இந்த இரட்டைக் கொலைக்கான விரிவான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
