தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு அதிரடி திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
மேலும் மாநில நிர்வாகிகள் முதல் கிளை மட்ட நிர்வாகிகள் வரை சுமார் 2,000 பேரை நேரில் சந்தித்து, அவர்களுடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகளுடன் இணக்கமான சூழலை உருவாக்கி, அவர்களை முழு வீச்சில் களப்பணியாற்றத் தூண்டுவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
இதனால் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள விஜய், புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்க உள்ளார். சென்னை பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் இருந்து தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க உள்ள அவர், தமிழகம் முழுவதும் சுமார் 25 நாட்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள த.வெ.க, இந்தத் தேர்தலில் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் வியூகங்களை வகுத்து வருகிறது. விஜய்யின் இந்த நேரடிச் சந்திப்பு மற்றும் புகைப்பட நிகழ்வு அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
