தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த 34 வயது ஆமிர் ஹுசைன் லோன். சிறுவயதில் நேர்ந்த விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்த ஆமிர், கிரிக்கெட் மீதான காதலால் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கிக்கொண்டார்.
பேட்டை தனது தோள்பட்டை மற்றும் கன்னத்திற்கு இடையே இடுக்கிக்கொண்டு பேட்டிங் செய்யும் இவர், பந்துவீசும்போது தனது கால்களையே பயன்படுத்தி துல்லியமாக ‘லெக் ஸ்பின்’ செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
இவரது திறமையைக் கண்டு வியந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நேரில் சென்று இவரைச் சந்தித்ததுடன், இவருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்தினார்.
View this post on Instagram
தற்போது ஆமிரின் இந்த அசாத்திய முயற்சிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், அதானி அறக்கட்டளை 67.6 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்தத் தொகையை வைத்துத் தனது சொந்த ஊரான பிஜ்பெஹாராவில் (Bijbehara) உள்விளையாட்டு கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் தொடங்கி வருகிறார் ஆமிர்.
காஷ்மீரின் கடும் குளிர்காலத்திலும் குழந்தைகள் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகத் நவீன வசதிகளுடன் இந்த அகாடமி உருவாகி வருகிறது. “பள்ளிக்குச் செல்லத் தகுதியில்லை” என்று ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட ஆமிர், இன்று நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை குழந்தைகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கத் தயாராகி வருவது பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
