பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 11-வது சீசன் நேற்று லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. நடப்புச் சாம்பியன் லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் அறிமுக அணியான ஹைதராபாத் கிங்ஸ்மென் மோதிய இந்த ஆட்டத்தில், கிரிக்கெட்டை விட மைதானத்தில் நடந்த குளறுபடிகளே சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரசிகர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட மைதானத்தில், செயற்கையான கைதட்டல் சத்தங்களை (Artificial Crowd Noise) ஒளிபரப்பியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. அதுமட்டுமின்றி, ஒளிபரப்பின் போது ஆடியோ மற்றும் வீடியோவில் ஏற்பட்ட குளறுபடிகள் ரசிகர்களை செம கடுப்பாக்கியது.

இதையெல்லாம் விட ஒரு படி மேலே போய், ஆட்டத்தின் நடுவே வெள்ளை நிற பந்து திடீரென இளஞ்சிவப்பு (Pink) நிறமாக மாறியது வீரர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியது.
ஹைதராபாத் அணி வீரர்களின் சீருடையில் இருந்த தரமற்ற சாயம் பந்தில் ஒட்டியதே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், பிஎஸ்எல் (PSL) என்பதை “பைசா ஷார்டேஜ் லீக்” (Paisa Shortage League) என்றும், “பெட்ரோல் ஷார்டேஜ் லீக்” என்றும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஒரு பக்கம் சாதாரண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விஐபி-க்கள் மட்டும் மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசித்தது “விவிஐபி லீக்” எனப் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.