ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இன்று பெங்களூரில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் மார்ச் 30 அன்று நடக்கவுள்ள சிஎஸ்கே – ராஜஸ்தான் போட்டி மீதுதான் உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், ராஜஸ்தான் அணியின் தூணாக இருந்த சஞ்சு சாம்சன் இப்போது சிஎஸ்கே அணியில் இணைந்திருப்பதுதான். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி இந்த முறை சிஎஸ்கே-வின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கப் போவது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

​இந்த நிலையில், சிஎஸ்கே-வின் யூடியூப் பக்கத்தில் வெளியான ருதுராஜின் நேர்காணல் பல ரகசியங்களை உடைத்துள்ளது. அதில் பேசிய ருதுராஜ், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சஞ்சு என்னிடம் சிஎஸ்கே சூழல் பற்றியும், தோனி பற்றியும் ஆர்வமாகக் கேட்டார்.

‘நான் சிஎஸ்கே-வுக்கு வந்தால் உனக்குக் கீழே ஒரு வீரராக விளையாடவே விரும்புகிறேன், எனக்குக் கேப்டன் பதவி தேவையில்லை’ என்று அப்போதே சஞ்சு பெருந்தன்மையுடன் கூறினார்” என்று தெரிவித்துள்ளார். ருதுராஜ் மற்றும் சஞ்சு இடையே ஈகோ பிரச்சனை வரும் என்று நினைத்தவர்களுக்கு, இந்த நேர்காணல் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.