தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவேங்கை புடையான்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்து வயதில் மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 10 வயது மகன் பாலமுருகன், ஸ்ரீதர் என்பவரின் எட்டு வயது மகன் ஜஸ்வந்த் ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5 மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அருகிலுளள மருத குடி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்காக சென்றனர். அப்போது சிறுவர்கள் மூவரும் அதன் கிராமத்தில் உள்ள ஒரு குளத்திற்கு சென்ற நிலையில் அங்கு இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மூவரும் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் திடீரென மூழ்க ஆரம்பித்தனர்.
சிறுவர்கள் காப்பாற்றுங்கள் என்று அபாய குரல் எழுப்பிய நிலையிலும் சிறிது நேரத்தில் மூன்று மாணவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு திருவிழாவில் தங்கள் குழந்தைகளை காணாமல் போனதை அறிந்த பெற்றோர் அவர்களை தேடி அலைந்தனர். பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு சென்ற போது சிறுவர்களின் உடமைகள் அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பின்னர் அனைவரும் குளத்திற்குள் இறங்கி தேட ஆரம்பித்தனர்.
அங்கு சிறுவர்கள் மூவரையும் மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இதைக் கேட்டு பெற்றோர் உறவினர்களும் கதறி துடித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
