திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சியில் விவசாயியான செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செந்தில்நாதன் புதிதாக 2000 கோழிக்குஞ்சுகளை வாங்கி பண்ணையில் விட்டிருந்தார். நேற்று மதியம் கோழிப்பண்ணையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க இயலவில்லை.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 2000 கோழிக்குஞ்சுகள், அருகே இருந்த வைக்கோல் படப்பு ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கோழிக்குஞ்சுகளை வெப்பமூட்டுவதற்காக பண்ணையில் வைக்கப்பட்டிருந்த தனல் பானையிலிருந்து தீப்பொறி பறந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.