தமிழகக் கோயில்களில் பின்பற்றப்பட்டு வரும் சிறப்பு கட்டண தரிசன முறையை முழுமையாக ரத்து செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் முக்கியக் கோயில்களில் ₹500 வரை வசூலித்துச் சிறப்பு தரிசனம் வழங்குவது சட்டப்பிரிவுகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டுக்குப் பின் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த பாரபட்சமான ‘திராவிட தர்மம்’ இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும், இதனால் சாதாரண ஏழை மக்கள் பொது வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் நீடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களுக்கு மட்டுமே இலவச சிறப்பு தரிசனம் வழங்கப்பட வேண்டும் என்றும், பணத்தின் அடிப்படையில் கோயில்களில் பாரபட்சம் காட்டுவதைத் தடுக்க இந்த கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
