உலகளவில் பல்வேறு அரசியல் பதற்றங்களும், போர் மேகங்களும் சூழ்ந்துள்ள வேளையில், அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அமைச்சர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் ஆபத்தான இரு பாம்புகளைத் தனது வெற்று கைகளால் பிடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரபல மருத்துவர் மெஹ்மத் ஓஸ் என்பவரின் ஆடம்பர இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை, கென்னடி ஜூனியரின் மனைவியும் பிரபல ஹாலிவுட் நடிகையுமான ஷெரில் ஹைன்ஸ் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்த வீட்டின் ஒரு மூலையில் இரு கருநாகங்கள் போன்ற பாம்புகள் சுருண்டு கிடப்பதைக் கண்ட கென்னடி, முறையான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, கோட் மற்றும் டை அணிந்த உடையில் அவற்றை நோக்கித் துணிச்சலாக முன்னேறிச் சென்றுள்ளார்.

 

அமைச்சர் பாம்புகளை நோக்கிச் சென்றபோது, அவரது மனைவி ஷெரில் ஹைன்ஸ், “அன்பே, அதைச் செய்யாதீர்கள், ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று பயத்துடன் கத்தியுள்ளார். எனினும், எவ்வித அச்சமுமின்றி இரு பாம்புகளையும் கென்னடி தனது இரு கைகளாலும் மிக இறுக்கமாகப் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு அவரது விரலை மிகக் கடுமையாகக் கடித்தது. பாம்பு கடித்த பிறகும், முகத்தில் எவ்வித வலியோ அல்லது பயத்தின் அறிகுறியோ இன்றி, அவர் புன்னகைத்தவாறே அந்தப் பாம்புகளை கேமராவின் முன்னால் காட்டி சாகசம் புரிந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி, “கடவுளே, நீங்கள் முற்றிலும் பைத்தியமாகிவிட்டீர்கள்!” என்று அதிர்ச்சியில் கூச்சலிட்டார். தற்பொழுது இந்த விசித்திர சாகச வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி, உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.