கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது தந்தையின் பெயரையும் புகழையும் வைத்துக்கொண்டு மிக எளிதாக ஒரு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும். அவரது சகோதரி சாரா டெண்டுல்கரைப் போல எவ்வித சிரமமுமின்றி குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அர்ஜுன் டெண்டுல்கரோ கடின உழைப்பையும், சவால்கள் நிறைந்த பாதையையுமே தனது லட்சியமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

​தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுனுக்கு, இன்னும் ஆடும் லெவனில் (Playing XI) வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், அது குறித்து எவ்வித புகாரும் தெரிவிக்காமல், மைதானத்தில் சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களைச் சுமந்து செல்வது, அவர்களுக்கு உதவுவது என ஒரு சாதாரண வீரராகக் கடும் உழைப்பைச் செலுத்தி வருகிறார். “பெரிய இடத்துப் பிள்ளை” என்ற எந்தவொரு தலைக்கனமும் இன்றி, திரைக்குப் பின்னால் அவர் காட்டும் இந்த அர்ப்பணிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.