பஞ்சாப் மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கோடாரியால் கொடூரமாகக் கொலை செய்த கணவர், அந்தப் பாதகச் செயலை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சங்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப். இவரது மனைவி கர்கிடன் கவுர். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் ஒருகட்டத்தில் முற்றியதால், ஆத்திரமடைந்த குல்தீப் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கர்கிடன் கவுரைச் சரமாரியாக வெட்டியுள்ளார்

இதில் பலத்த காயமடைந்த கர்கிடன் கவுர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மிகக் கொடூரமான விஷயமாக, தனது மனைவியைக் கொலை செய்வதையும், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் குல்தீப் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை எவ்வித பயமுமின்றி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கொலை செய்த சிறிது நேரத்திலேயே, குல்தீப் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சடலமாகக் கிடந்த கர்கிடன் கவுரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குல்தீப்பை கைது செய்த போலீஸார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். “கொலைக்கான பின்னணி என்ன? குடும்பப் பிரச்னை மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?” என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளத்தில் கொலையைப் பதிவிட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.