தமிழகத்தின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கட்சி தொடங்கிய இரண்டே வருடத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க இருக்கிறது. குறிப்பாக அந்த கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் சென்னையில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். அந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ் பாபு வெற்றி பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தோல்வியை சந்தித்தாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளதால் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்துதான் ஆக வேண்டும். அப்படி ராஜினாமா செய்யும் பட்சத்தில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றால் திமுக இரண்டாவது இடத்தை பிடிக்கும் பட்சத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகும் அந்தஸ்து கிடைக்கும். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்த பட்சத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக மாறலாம் என்று கூறப்படுகிறது.