கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.

இந்த நட்பைப் பயன்படுத்தி, அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தை வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த மாணவி, இரண்டு ஆண்டுகள் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

பேராசிரியர் நாகேஷ்வரின் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அதைப் பொறுக்க முடியாமல் அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைக் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து கேம்ப் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பேராசிரியர் நாகேஷ்வரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.