தமிழக அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து செயல்படுவதை முன்னிட்டு திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, விசிகவின் வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதை விமர்சித்து திமுக எம்பி ஆ. ராசா சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, திமுகவின் கீழ்மட்ட ஐடி விங் நிர்வாகிகள் தங்களை ஆபாசமாக விமர்சிப்பதாகக் குற்றம் சாட்டிய விசிக, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளது. “விசிக ஒன்றும் யாருக்கும் எழுதி வைக்கப்பட்ட கொத்தடிமை அல்ல மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சுயாதீனமான பேரியக்கம்” என்று விசிக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
மேலும் கூட்டணி அரசியலை ஒற்றைக் கட்சி ஆதிக்கமாகப் பார்க்காமல், அதிகாரப் பகிர்வை ஜனநாயக உரிமையாகக் கருதுவதாகவும், தங்கள் மீது அவதூறு பரப்புபவர்கள் தொடர்ந்து கதறலாம் என்றும் விசிக விமர்சித்துள்ளது. தவெக கோட்டைக்குள் சிறுத்தைகள் கம்பீரமாக நுழைகிறார்கள் என விசிக விடுத்துள்ள இந்த அதிரடிப் பதிவு, தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
