ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை வந்திறங்கிய ஆர்சிபி அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிம் டேவிட், விமான நிலையத்தில் ரசிகர்களால் முற்றுகையிடப்பட்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், டிம் டேவிட்டின் அனுமதி இல்லாமலேயே அவரோடு வலுக்கட்டாயமாகச் செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இருப்பினும், டிம் டேவிட் மிகவும் நிதானமாக அந்த ரசிகரின் செல்போனை வாங்கி அவரிடமே திருப்பித் தந்துவிட்டு காரில் ஏறிச் சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ரசிகர்களுக்குக் கொஞ்சம் கூட நாகரீகம் கிடையாதா?” என்றும், “வீரர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லையா?” என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.