ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் இப்போது வைபவ் சூர்யவன்ஷி என்ற 15 வயது சிறுவன் மீதுதான் விழுந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்த இளம் புயல், ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் காட்டிய அதிரடி யாராலும் நம்ப முடியாததாக உள்ளது.

குறிப்பாக புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களின் பந்துகளை முதல் பந்திலேயே பவுண்டரிக்கு விரட்டி அசத்தி வருகிறார்.

ஆர்சிபிக்கு எதிராக வெறும் 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ‘மிரட்டல்’ காட்டிய வைபவ்வை பார்த்து, “இவன் கிரிக்கெட் விளையாடவில்லை, வீடியோ கேம் ஆடுகிறான்” என்று முகமது கைஃப் ஆச்சரியப்பட்டுள்ளார். இர்ஃபான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற ஜாம்பவான்களும் இவரது பயமற்ற ஆட்டத்தைக் கண்டு வியந்துள்ளனர்.

ஆனால், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்த இளம் வீரருக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். “வைபவ்வின் திறமை அபாரமானது,

ஆனால் மீடியாக்கள் அவரை இப்போதே அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து தள்ளிவிட வேண்டாம். அதிகப்படியான எதிர்பார்ப்புகள் ஒரு நல்ல கரியரை ஆரம்பத்திலேயே சிதைத்துவிடும்.

மேலும், இனி வரும் காலங்களில் எதிரணி பயிற்சியாளர்கள் வைபவ்வின் பலவீனங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவரை நெருக்கடிக்கு உள்ளாக்குவார்கள்.

அந்த சோதனைகளை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் அவரது உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கும்” என்று கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.