ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள அலுக்குளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. தவெக-வின் கொங்கு மண்டலப் பொறுப்பாளரான செங்கோட்டையன், கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்குச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், “இனி என்னுடைய அரசியல் பயணம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் தான் இருக்கும்” என்று உறுதிபடத் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை செங்கோட்டையன் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டோர் தவெக-வில் இணைந்திருப்பது, கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
