தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் நாட்டுவதற்கு மாற்று கட்சியினர் பிரச்சனை செய்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிக்காரர்களுக்கு எங்கள் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் எங்கள் கொடி மட்டும் கசக்கிறது என்று திருமாவளவனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அ. வாசுதேவநல்லூர் என்ற பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் நாட்டியுள்ளனர். இந்த கொடி கம்பம் அனுமதி இன்றி நடப்பட்டதாக கூறப்படும் நிலையில் வட்டாட்சியர் இந்திரா தலைமையிலான அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்றுமாறு கூறியுள்ளனர்.

இதன் காரணமாக விசிக கட்சியின் மாவட்ட செயலாளர் தனபாலுக்கும் வட்டாட்சியர் இந்திராவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனபால் வட்டாட்சியரை பார்த்து கைகால்களை வெட்டி விடுவேன் என மிரட்டியதோடு ஒருமையில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தனபால் மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தனபால் தன்னை ஒருமையில் பேசியதன் காரணமாக வட்டாட்சியரும் போலீசில் அவர் மீது புகார் கொடுப்பதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.