தமிழ்நாட்டில் பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் விடுமுறை நீடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பள்ளிகள் திறக்கும் சமயத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஜார்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.