ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானிக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் நிர்வாகம் விதித்துள்ள இரண்டு ஆண்டு தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முசரபானி ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதாகக் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் புகாரை முசரபானியின் ஏஜென்ட் வன்மையாக மறுத்துள்ளார்.
மேலும் “பெறாத ஒரு ஒப்பந்தத்தை ஒருவரால் எப்படி மீற முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பிஎஸ்எல் தரப்பிலிருந்து முறையான இறுதி ஒப்பந்த நகல் எதுவும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், அதனால் ஒப்பந்த மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. ஏஜென்ட்டின் தரப்பு விளக்கப்படி, ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததே தவிர, சட்டப்பூர்வமான எவ்வித ஒப்பந்தத்திலும் முசரபானி கையெழுத்திடவில்லை. இந்நிலையில், ஆதாரமற்ற காரணங்களுக்காக ஒரு வீரரின் விளையாட்டு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் தடை விதிப்பது முறையற்றது என முசரபானி தரப்பு வாதிடுகிறது.
இந்தத் தடையை நீக்கக் கோரியும், உண்மை நிலையை விளக்கக் கோரியும் அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பிஎஸ்எல் நிர்வாகம் இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே இந்தச் சிக்கல் முடிவுக்கு வரும்.
