தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. இதனையடுத்து தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகளும், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கடுப்பான திமுகவினர், தங்களை கழட்டிவிட்டு தவெக பக்கம் தாவிய காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சென்னையில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில், ‘நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகம் இழைக்கும் முதுகில் குத்திய காங்கிரஸ்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, ‘இந்திய அளவில் பாஜக வெற்றி பெற காங்கிரஸ்தான் காரணம்’ என இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் விமர்சித்திருந்தார். இந்த கடுமையான விமர்சனத்திற்கு ஏற்கனவே காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி கொடுத்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்திலும் திமுகவிற்கு எதிராகத் தனது எக்ஸ் (X) தளத்தில் மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
“தேர்தல் தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளைத் தாக்குவது அரசியல் நாகரிகம் அல்ல” என்று அவர் சாடியுள்ளார். மேலும், மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான காங்கிரஸை விமர்சிக்க குறைந்தபட்ச அரசியல் அனுபவமாவது அவசியம் என்றும், கைதட்டலுக்காகப் பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் உதயநிதி ஸ்டாலினின் பெயரை குறிப்பிடாமல் சசிகாந்த் செந்தில் விடுத்துள்ள அறிக்கை தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
